42 லட்சம் ரூபாயை உறவினர் திருடியதாக கூறி நாடகமாடிய பெண் பேஸ்புக் நண்பரிடம் பணத்தை கொடுத்து வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது.
சென்னை, மந்தைவெளி, பெரியபள்ளி தெருவை சேர்ந்த தொழிலதிபர் தமீம் அன்சாரி கடந்த மாதம் 20ஆம் தேதி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது வீட்டில் இருந்த 42 லட்சம் ரூபாய் பணம் திருடு போனதாக கூறியிருந்தார். முன்னதாக பணம் திருடு போகும் நாளில் அன்சாரியின் உறவினர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அந்த நேரத்தில் பணம் காணாமல் போனதால் உறவினர்கள் யாராவது எடுத்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக தமீம் அன்சாரி கூறியிருந்தார்.
அதன்பின் தமீம் அன்சாரியின் மனைவி கன்ஸீம் பணத்தை அன்சாரியின் தங்கை கணவர் திருடியதாக கூறினார். அவர் கருப்பு பையில் பணத்தை எடுத்துச் சென்றதை தனது மகன் பார்த்ததாகவும் காவல் நிலையத்தில் தெரிவித்தார். இதனையடுத்து அன்சாரியின் தங்கை கணவரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் தான் பணத்தை எடுக்க வில்லை என்று கூறினார். பின்னர் அன்சாரியின் மகனை விசாரித்த போது தாய் தன்னை அவ்வாறு கூற சொன்னதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கன்ஸீமிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காவல்துறையினர் தன்னை தொந்தரவு செய்வதாகவும், தனது செல்போனை தேவையில்லாமல் ஆய்வு செய்வதாகவும், மயிலாப்பூரில் துணை ஆணையரிடம் புகார் அளித்தார். இதனால் காவல்துறையினரின் சந்தேகம் வலுப்பெற்றது. பின்னர் கன்ஸீமியின் செல்போனை ஆய்வு செய்தபோது அவர் ரியாஸ் என்ற நபருடன் அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்ததில் 42 லட்சம் பணத்தை கருப்பு பையில் போட்டு ரியாஸ் என்ற பேஸ்புக் நண்பரிடம் ராயப்பேட்டை மருத்துவமனை அருகே ஒப்படைத்ததாகவும், திருப்பி கேட்கும்போது தர வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்தார். ரியாஸ் குறித்து விசாரணை செய்ததில் மூன்று வருடமாக ஃபேஸ்புக் மூலம் பழக்கம் இருந்தது தெரியவந்தது. செலவிற்காக அடிக்கடி பணமும், நகையும் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து சென்னை புரசைவாக்கத்தில் வசித்துவந்த ரியாஸை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் நாற்பத்தி ஒரு லட்சம் ரூபாய் பணம் தன்னிடம் இருப்பதை ஒப்புக்கொண்டார். இதில் அன்சாரியின் மனைவி உறவினர் மீது திருட்டு நாடகம் நடத்தியது ஏன்? என்ற விசாரணை நடத்தப்பட்டது. பணத்தை சிறிது சிறிதாக திருடிக்கொண்டு ஆண் நண்பரோடு சென்றுவிட நினைத்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கைதான ரியாஸ் என்பவர் பேஸ்புக் மூலம் பெண்களிடம் காதல் நாடகமாடி பணத்தை வசூல் செய்து வருவதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இவரிடம் வேறு ஏதாவது பெண் ஏமாந்து உள்ளாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.