இங்கிலாந்து நாட்டில் உருமாறி உள்ள புதிய கொரோனா வைரசால் தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தற்போது உருமாறி பரவிக்கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 33ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். முந்தைய வைரஸைக் காட்டிலும் இதன் பரவல் 70% அதிகமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இங்கிலாந்து நாட்டிற்கான விமானப் போக்குவரத்தை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன.
மேலும், தமிழகத்தைப் பொருத்தவரை இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து வரும் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைவரையும் கட்டாயமாக தனிமைப் படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.இந்நிலையில் லண்டனில் இருந்து சென்னைக்கு 3 விமானங்கள் வந்துள்ளன.இதில் டெல்லி வழியே சென்னை வந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர் உடனடியாக வீட்டுத் தனிமையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய சுகாதரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், கொரோனா உறுதியான நபரின் சளி மாதிரி புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது சளி மாதிரி ஆய்வுக்கு பிறகே வீரியமிக்க கொரோனாவா அல்லது வீரியமில்லாத கொரோனாவா என்பது தெரியவரும். இங்கிலாந்தில் இருந்து பரவும் கொரோனா குறித்து தமிழக மக்கள் பயப்படவேண்டாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.