பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திருச்சி ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “சமூக நீதி என்பது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டிய ஒன்று. பணம் இருப்பவர்களுக்கு ஒரு கல்வி. இல்லாதவருக்கு ஒரு கல்வி என்று இருக்கக் கூடாது. எல்லோருக்கும் சமத்துவமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம். நீட் தேர்வு வேண்டாம் என சட்ட போராட்டம் ஒரு பக்கம் நடந்தாலும், நீட் தேர்வு இருக்கும் வரை மாணவர்கள் தயார் செய்ய வேண்டிய அடிப்படையில் ஹைடெக் பயிற்சி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
மனரீதியாக அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படுகிறது ஒவ்வொரு பள்ளியிலும் உயர்கல்வி வழிகாட்டு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அங்கு கவுன்சிலிங் எடுத்துக் கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் ஹெல்ப் லைன் நம்பர்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பல மாணவர்கள் தொடர்ந்து அதில் பேசிக் கொண்டுதான் உள்ளார்கள். எந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது. உயிரை மாய்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட வேண்டாம். அதனால் நீங்கள் ஒன்றும் சாதிக்க போவதில்லை. மாறாக பெற்றோருக்கும் இந்த சமூகத்துக்கும் நீங்கள் கவலையை தான் கொடுக்கிறீர்கள் என்பதை உண்மை” என்று தெரிவித்தார்.