காவலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நிறுவன முதலாளி உள்பட 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள தெற்கு மாசி வீதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ரத்தினவேல் கோயம்புத்தூருக்கு வந்துள்ளார். அதன்பின் ராமநாதபுரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ரத்தினவேல் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனியார் நிறுவன உரிமையாளர் திலீப்குமார் மற்றும் நிறுவன அதிகாரி ஜான் ஆகியோரை ரத்தினவேல் தொடர்பு கொண்டு 2 மாத சம்பள பாக்கியை வழங்குமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்கள் நவ இந்தியா பகுதிக்கு வருமாறு ரத்தினவேலை அழைத்துள்ளனர்.
அதனை நம்பி ரத்தினவேல் அங்கு சென்று அவர்களிடம் சம்பள பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவரும் உங்களின் வங்கி கணக்கிற்கு சம்பளத்தை அனுப்பி விட்டோம் என தெரிவித்துள்ளனர். இதனை நம்பாத ரத்தினவேல் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த திலீப் குமாரும், ஜானும் இணைந்து ரத்தினவேலை சரமாரியாக தாக்கி அவரை காரில் ஏற்றி கொடிசியா பகுதிக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு ரத்தினவேல் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் தீ வைத்து விட்டு இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனை அடுத்து ரத்தினவேலின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து அவரை காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரத்தினவேல் நேற்று பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் திலீப்குமார் மற்றும் ஜான் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.