மோட்டார் வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர் நிலைதடுமாறி குளத்தில் விழுந்து உயிருக்குப் போராடிய போது நாய் ஒன்று அவரை காப்பாற்றியது.
வாயில்லா ஜீவனாக சுற்றி திரியும் நாய்கள் நன்றி உணர்வு மிக்கது. உணவளிக்கும் எஜமானரின் கட்டளைக்குக் கீழ்ப் பணிந்து வீட்டுக்கு நல்ல காவலாளியாக இருக்கும். இந்த வகையில் வீட்டில் மட்டுமின்றி தெருநாய்கள் சந்தேகப்படும்படி யாரேனும் வந்தால் விடாமல் குறைத்து வீதியில் உள்ளவர்களை விழிப்படையச் செய்யும். அந்த வகையில் தெருநாய் ஒன்று உயிருக்கு போராடிய ஒருவரின் உயிரை காப்பாற்றியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பகுதியை சேர்ந்த ஜோன் என்பவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர் சம்பவத்தன்று நிறுவனத்துக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர குளத்தில் விழுந்தார். இதனால் ஜோன் மயங்கியதால் குளத்தில் மூழ்கி தொடங்கினார். இதனை பார்த்த அந்த பகுதியில் இருந்த தெரு நாய் குறைக்கத் தொடங்கியது. நாய் குளத்தை நோக்கி விடாமல் குறைக்க தொடங்கியதால் அந்தப் பகுதி வழியாக வாகனத்தில் வந்தவர்கள் குளத்தில் என்ன இருக்கிறது என்று எட்டி பார்த்தனர்.
அப்போது ஆபத்தான நிலையில் மூழ்கி கொண்டிருந்த அந்த நபரை பார்த்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜோன் உயிர் பிழைக்க காரணம் அந்தப் பகுதியில் உள்ள தெருநாய் என்பதால் அந்தப் பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். அந்த நாய்தான் வாலிபரின் உயிரை காப்பாற்றியது என்று அந்த நாய்க்கு, வாலிபரின் உறவினர்கள் உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர்.