முதல் கல்யாணத்தை மறைத்து இளம் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்த நபரை ஒரு ஆண்டுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த 38 வயதான லோகநாதன் என்ற ரவிகுமார் கடந்த வருடம் திருமண தகவல் மையத்தின் மூலம் இளம் பெண் ஒருவரை இருவீட்டார் சம்மதத்தின் பேரில் கல்யாணம் செய்துகொண்டுள்ளார். அதன் பின் வேலைக்கு சென்ற ரவிகுமார் சில தினங்களாக வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த இளம்பெண் கணவரோடு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது லோகநாதன் எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி மூன்று குழந்தைகள் இருக்கிறது என்று கூறியுள்ளார். இதை கேட்டு அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் லோகநாதன் அந்தப் பெண்ணிடம் இதை பற்றி யாரிடமாவது கூறினால் உனது தங்கையை கற்பழித்துவிட்டு உன்னையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
இதனை அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் லோகநாதன் மீது வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள லோகநாதனை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் வடபழனி உதவி கமிஷனர் தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் அசோக்குமார், ராஜ்மோகன் ஆகியோர் குன்றத்தூரில் பதுங்கி இருந்த லோகநாதனை மடக்கிப்பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.