கடலூர் மாவட்டத்தில் உள்ள குயிலாபாளையம் பகுதியில் கரும்பு வெட்டும் தொழிலாளியான பாலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது. அதே பகுதியை சேர்ந்த தம்பதியினர் வண்ணாரப்பேட்டை பகுதியில் தங்கியிருந்து கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு 13 வயதில் மகள் இருக்கிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமியின் தந்தை 4 ஆயிரம் ரூபாய் பணத்தை கையில் வைத்துக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது பாலு சிறுமியிடம், உனது தந்தை மது குடிப்பதற்கு பணத்துடன் செல்கிறார்; அவரை அழைத்து வா என கூறியுள்ளார். இதனால் சிறுமி தனது தந்தையை தேடி இருட்டான பகுதிக்கு சென்ற போது அவரது வாயை பொத்தி பாலு மரத்தடிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் அந்த சிறுமியை தஞ்சாவூருக்கு கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பாலுவை கைது செய்து சிறுமியை மீட்டனர். இந்த வழக்கினை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழிலரசி பாலுவுக்கு 4000 ரூபாய் அபராதமும், 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.