கல்லூரி மாணவியை பேசி மயக்கி சேலம் அழைத்து சென்று தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரி பகுதியில் கல்லூரி மாணவி வசித்து வருகிறார் இவர் தர்மபுரியில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்து வருகின்றார். கடந்த 30ஆம் தேதி இந்த மாணவி பேருந்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 50 வயது மதிக்கத்தக்க நபர் பேருந்தில் ஏறி மாணவிக்கு அருகில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் அந்த நபர் உனது தந்தையை எனக்கு தெரியும் என பேச ஆரம்பித்து மாணவியை மயக்கி சேலத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதனையடுத்து அங்கு உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து அந்த நபர் மாணவிக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளார். அதன்பிறகு மாணவியுடன் அந்த நபர் நீ அணிந்திருக்கும் தங்க நகையில் லட்சுமி படம் பதித்தால் உங்கள் குடும்பத்தில் உள்ள தோஷம் நீங்கும் என கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவி தான் அணிந்திருந்த தங்க நகையை கழற்றி அந்த நபரிடம் கொடுத்துள்ளார். பின்னர் கழிவறைக்கு சென்று வருவதாக கூறி விட்டு வெளியேறிய அந்த நபர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.
அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புதிய பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் காவல்துறையினர் அந்த மாணவியை அவரது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.