தாசில்தார் உள்பட 2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் மூலம் கடந்த 2013-ஆம் ஆண்டு முதியவர் உதவித்தொகை உழவர் பாதுகாப்பு உதவித்தொகை மற்றும் முதியவர் உதவித்தொகை ஆகியவற்றிற்கு மொத்தம் 26 லட்சத்து 93 ஆயிரத்து 495 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உதவி தொகை வழங்கியதற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் முறைகேடு நடந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்போதைய பழனி ஆர்.டி.ஓ சுந்தரராஜ் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் பழனி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுப்பிரமணிய பிரசாத், உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சுப்பிரமணிய பிரசாத் மற்றும் ராஜேந்திரன் ஆகியோருக்கு தலா ஆறு ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.