உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் பகுதியில் மாரியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள அம்மனுக்கு பூஜை செய்வதற்காக பூசாரி கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் சிலர் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து வந்துள்ளார். அவர்களை கண்டவுடன் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இவர்களில் 3 பேரை மட்டும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இதுகுறித்து மயிலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தலிங்கமடம் இருளர் குடியிருப்பில் வசிக்கும் குமார், பாண்டியன், ராமச்சந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மொத்தம் 10 கோவில்களில் கைவரிசை காட்டியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் சங்கர், விஜி, செல்வம், கார்த்தி ஆகிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.