திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இடதுசாரி கட்சிகளுக்கு இடையே இழுபறி ஏற்பட்டு இருக்கிறது. முதல்கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்து முடிந்திருக்க கூடிய நிலையில் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
ஆனால் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் சுமூகமான முறையில் நடைபெறவில்லை என்று இடதுசாரி கட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு அவசர கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தி.நகர் கட்சி அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோரும், மாநில நிர்வாக குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ள இருக்கின்றார்கள். அதே போன்று இரண்டு நாட்கள் மாநில நிர்வாகிகள், உறுப்பினர்கள் சென்னையில் இருக்க வேண்டும். அவசர கூட்டங்களுக்கு ஏதேனும் கூடி முடிவெடுக்கும் போது நிர்வாகிகள் சென்னையில் இருந்தால் எளிதாக இருக்கும் என்றும் அறிவுறுத்தபட்டிருக்கின்றது.