ஆதி புருஷ் படத்திற்காக நடிகர் பிரபாஸ் உடல் எடையை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சஹோ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலி கான் ராவணன் கதாபாத்திரத்திலும், சன்னி சிங் லக்ஷ்மண் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
மேலும் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் தயாராகும் இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ் படத்திற்காக உடல் எடையை அதிகரித்து வருவதாக நடிகர் சன்னி சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ‘பிரபாஸும் நானும் இந்த படத்திற்காக உடல் எடையை அதிகரிக்கவும், கைகளில் தசைகளை வலுவாக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார். மேலும் அவர் இதற்காக செயற்கை மருந்துகள் மற்றும் ஊசிகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையிலேயே பயிற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.