ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரிகியம் மலை கிராமத்தை சேர்ந்த சித்துமாரி (55) என்பவர் உடல் நலகுறைவு காரணமாக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சித்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உறவினர்கள் ஆம்புலன்ஸில் சித்துமாரியின் உடலை மாக்கம்பாளையம் நோக்கி ஆம்புலன்ஸில் ஏற்றி வந்து கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸ் குரும்பூர் பள்ளம் வரை சென்றது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் குரும்பூர் பள்ளத்தில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டார்.
பின்னர் சித்துமாரியின் உறவினர்கள் உடலை சுமந்து கொண்டு காட்டாற்றில் இறங்கி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து மாக்கம்பாளையம் கொண்டு சென்றனர். பின்னர் அவரது உடல் எரிக்கப்பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, சத்தியமங்கலத்தில் இருந்து மாக்கம்பாளையம் செல்ல குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் என 2 காட்டாறுகளை கடந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மிகவும் சிரமப்படுகிறோம். எனவே கடம்பூர் மாக்கம்பாளையம் இடையே தரைப்பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.