உறுப்பினர் அட்டைகளை ஒப்படைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிமுக உறுப்பினர் அட்டைகளை முறையாக உரியவர்களிடம் ஒப்படைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓபிஎஸ் இபிஎஸ் எச்சரித்துள்ளனர். இது குறித்து நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அதிமுகவின் அமைப்பு தேர்தலை நடத்துவதற்கு ஏற்கனவே கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகள் 2018ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
உறுப்பினர் படிவங்களை பூர்த்தி செய்து உரிய கட்டண தொகையுடன் கழகத் தலைமை கழகத்தில் சேர்த்து ரசீது பெற்றவர்களுக்கு உரிமை சீட்டுகள் வழங்கப்படுகின்றது. புதிய உரிமை சீட்டுகளை பெற்றுள்ளவர்கள் மட்டுமே நடைபெற உள்ள கழக அமைப்பு தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள். இதனால் தலைமைக் கழகத்திலிருந்து உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைத்து அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அப்படி செய்யாதவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் நடைபெற உள்ள அதிமுக அமைப்பு தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் கூட தகுதி அற்றவர்கள் ஆவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.