காஷ்மீரில் உள்ள சம்பா மாவட்டத்தில் ரஜினி பாலா என்பவர் வசித்து வருகிறார். இவர் குல்காம் மாவட்டத்தில் கோபால்போராவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று அங்கு அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் ரஜினி பாலாவை சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த ஆசிரியரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து மே மாதத்தில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பண்டிட் சமூகத்தை சேர்ந்த இரண்டாவது நபர் ரஜினி பாலா ஆவார். கடந்த 12ம் தேதி பட்காம் மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்த ராகுல் பண்டிட் என்பவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த சில நாட்களாக பண்டிட் சமூகத்தினர் தவிர பொதுமக்கள், போலீசாரையும் பயங்கரவாதிகள் குறிவைத்து சுட்டுக் கொன்று வருகின்றனர்.
மேலும் கடந்த 25ஆம் தேதி ஒரு டிவி நடிகை அவரது வீட்டுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த மாதத்தில் மட்டுமே 7 பேர் இவ்வாறு பயங்கரவாதிகளால் பலியாகி உள்ளனர். இதனையடுத்து தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா ஆசிரியர் ரஜ்னி பாலா கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது மிகவும் இழிவான செயல் என்று அவர் கூறினார். இதற்கிடையில் ஆசிரியர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து காஷ்மீரின் பல பகுதிகளில் பெண்கள் உட்பட பண்டிட் சமூக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் தலையிட்டு சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் நேற்று முன்தினம் இரவு அவிந்திபுரா ராஜ்போரா பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஒரு பெண், ஓர் அரசு ஊழியர் கொல்லப்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்று போலீசார் தெரிவித்தனர்.