வட்டிவிகிதம், குறைந்தபட்ச இருப்புத் தொகை, அபராதம் ஆகியவை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் பயன்படுத்தாத வங்கிக்கணக்குகளை சிலர் முடிக்க விரும்புகின்றனர். குறைந்தபட்ச இருப்புத்தொகை பின்பற்றவில்லை என்றால், அபராதம், இதர சில கட்டணங்களைத் தவிர்க்க பயன்படுத்தாத தேவையில்லாத வங்கிக் கணக்குகளை “க்ளோஸ்” செய்வதே நல்லதாகும். நேரடியாக உங்களது வங்கிக் கிளைக்குச் சென்றோ (அல்லது) வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதன் வாயிலாகவோ வங்கிக் கணக்கை முடித்து வைக்கலாம். வங்கிக்கணக்கை பாதுகாப்பாக மூட சில வழிமுறைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
# இருப்புத்தொகை, மாத அறிக்கை
தாங்கள் முடித்து வைக்க விரும்பும் உங்களது சேமிப்புக்கணக்கின் இருப்பைச் சரிபார்ப்பது முக்கியம் ஆகும். அவ்வாறு இருப்புத்தொகையை சரிபார்ப்பதோடு, குறைந்தது சென்ற 2-3 வருடங்களில் அந்த கணக்கில் செய்த பணப் பரிவர்த்தனை விபரங்களை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதையடுத்து அந்த பரிவர்த்தனைகளை ஒரு முறை சரிபார்க்க வேண்டும். இது எதிர் காலத்தில் உங்களது செலவினங்களை சரிபார்க்கவும், வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கும் உதவும்.
# செலுத்தப்படாத பாக்கிகள், சேவைக்கட்டணங்கள்
உங்களது வங்கிக்கணக்கின் இருப்புத்தொகை போதுமான அளவு இல்லை என்றாலோ, இதர சேவைக் கட்டணங்களை செலுத்தாமல் இருந்தாலோ அபராதம் பிடித்தம் செய்யப்படும். பிடித்தம் செய்து இருப்புத்தொகை எதிர்மறை எண்ணில் இருந்தால் உங்களது வங்கிக்கணக்கை “க்ளோஸ்” செய்ய இயலாது. ஆகவே வங்கிக்கு செலுத்தவேண்டிய தொகையினை முறையாக செலுத்தியதும் கணக்கை முடித்து வைக்கவேண்டும். இல்லையென்றால் அது உங்களின் பணப் பரிவர்த்தனை குறித்த சிபில் ஸ்கோரை(CIBIL score) பாதிக்கும்.
இஎம்ஐ கணக்கு
இஎம்ஐ முறையில் கடன் (அல்லது) இதரக் கட்டணங்களை செலுத்த இந்த வங்கிக் கணக்கை பல செயலிகள் (அல்லது) கிரெடிட்கார்டுகளில் இணைத்து இருக்கலாம். ஆகவே அதை சரிபார்த்து “தானாக பணம் எடுத்துக்கொள்ளக்கூடிய” automatic debit முறையிலிருந்து மாற்றிவிட வேண்டும். இல்லையென்றால் அதற்குப் பதில் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தவுள்ள வங்கிக்கணக்கை இணைக்கலாம்.
கணக்கை முடிப்பதற்கு கட்டணம்
பொதுவாக வங்கிகள், சேமிப்புக்கணக்கு தொடங்கிய ஓராண்டுக்குள் அதனை “க்ளோஸ்” செய்ய கட்டணம் வசூலிக்கிறது. ஆகையால் ஓராண்டுக்குள் எனில் கண்டிப்பாக வங்கிக்கணக்கை முடித்து வைப்பதற்கு நீங்கள் கட்டணம் செலுத்தியாக வேண்டும். இக்கட்டணத்தைத் தவிர்க்க வேண்டுமெனில் நீங்கள் ஓராண்டு முடியும் வரை காத்திருக்க வேண்டும்.
அரசசார்ந்த சேவைகள்
சேவையை நிறுத்த விரும்பும் வங்கிக்கணக்கை, வருங்கால வைப்புநிதி, வருமான வரிக்கணக்கு, காப்பீடு, அரசுத் திட்டங்களின் வாயிலாக வரும் நிதி உள்ளிட்ட அரசு சார்ந்த சேவைகளில் இணைத்து இருந்தால், அதனை முறையாக நீக்கிவிட்டு, நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தவுள்ள வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும். அரசுசார்ந்த அனைத்து சேவைகளிலும் இதை மாற்றியதை உறுதிசெய்த பிறகே வங்கிக்கணக்கை க்ளோஸ் செய்யவேண்டும். இது அரசு சேவைகளைத் நீங்கள் சிக்கல் இன்றித் தொடர உதவும்.