சென்னை சாஸ்திரி பவனில் நடந்த மகளிர் தின சிறப்பு கருத்தரங்கை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது, மார்ச் 8 ஆம் தேதி மட்டுமின்றி அனைத்து நாட்களும் பெண்களுக்கான நாள் தான் என்பதால் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். பெண்களுக்கான உரிமையை நாம் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறோம். கண்டமேனிக்கு உடை உடுத்துவதை தான் பெண்ணுரிமை என்று நினைக்கின்றனர்.
ஆனால் நமக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் இருக்கிறது. ஆகவே பெண்கள் உடை அணியும்போது ஒரு கட்டுபாடு இருக்க வேண்டும். இதனால் பெண்களுக்கு சம உரிமை கிடைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அதாவது, பெண்களுக்கு மட்டுமே சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்றும் ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் இருந்தால்தான் சரியாக நடந்து கொள்வார்கள் என்றும் கேள்வி எழுகிறது.
இதனிடையில் பெண் உரிமை எது என்று நாம் நினைப்பதில் தான் பிரச்னை நிலவுகிறது. எனவே பெண்கள் நாகரீக உடைகள் உடுத்துவதில் கவனம் செலுத்துவது அவசியம் ஆகும். மற்றவர்கள் முகம் சுளிக்கும் அடிப்படையில் உடை அணிவதை தவிர்க்க வேண்டும். நன்றாக படிப்பேன், சாதனை செய்வேன், வளர்ச்சியடைவேன் என்பதுதான் பெண்கள் உரிமையே தவிர என் இஷ்டத்திற்கு உடை அணிவேன் என்பது பெண்ணுரிமை இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.