கோபத்தைக் கட்டுப்படுத்துவது ஆபத்தான வழி. ஆனால், கோபத்தை விட்டு விடுவதும் தவிர்ப்பதும் பாதுகாப்பான வழி. கோபத்தைக் கையாள தாய்மார்களுக்கு உள்ள வழிகளைப் பார்ப்போம்.
கோபம் வந்தால் உடலில் என்னென்ன நடக்கும்?
வயிற்று பிடிப்பது போன்ற உணர்வு, கைகளை ஏதோ செய்வது, கைகளைக் கோர்ப்பது, பிடிப்பது, உதறுவது, நெட்டி முறிப்பது, முறுக்குவது உச்சக்கட்ட கோப சூட்டால் நனையும் உணர்வு. உடல் சூடாகும், வேகமாக மூச்சு விடுதல், தலைவலி வரும், அங்கே இங்கே நடப்பது, முகம், கண்கள் சிவப்பாகும். எதையும் கவனிக்க முடியாமல் தவிப்பது, பதற்றமான மனம் மற்றும் உடல், தோள்ப்பட்டைகளில் இறுக்கம், வேகமாக இதயத்துடிப்பு, இதெல்லாம் உடலில் நடக்கும். இது நெகடீவ் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களைத் தூண்டி உங்களது உடல்நிலையும் மனநிலையும் மேலும் மோசமாக்கும்.
‘நான்’ என்ற மந்திர சொல்
நான் ரொம்ப வருத்தப்பட்டேன். இந்த விஷயத்துல நீங்க எனக்குத் துணையாக இல்லை என்று. இது வாக்கியம் ஒன்று. இந்த விஷயத்துல நீங்க கொஞ்சம்கூட துணையாக இல்ல… இது வாக்கியம் இரண்டு. இந்த இரண்டும் ஒரே அர்த்தம். ஆனால், பேசும்போது அதன் தீவிரம் சற்று மாறுப்படும். எனவே, பேசுகையில். வாக்கியம் ஒன்றையே பின்பற்றுங்கள். ‘நான்’ என்ற மந்திரத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீ, நீங்கள், அவர், அவர்கள் இதையெல்லாம் பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.
பேசும் முன் சிந்தி
பேசுவதற்கு முன் 20 நொடிகளாவது சிந்திக்கவும். கோபத்தில் பேசின வார்த்தைகளை மீண்டும் எடுக்க முடியாது. கோபம் ஒரு உருவமற்ற அம்பு. அதை எய்தினால் காயம் நிச்சயம். வலியும் நிச்சயம்.
அமைதிக்குப் பின் கோபம் காண்பிக்க
நீங்கள் அமைதியாகி விட்டால் நிதானமாகி விடுவீர்கள். இப்போது உங்களது கோபத்தை காட்டலாம். ஏனெனில் கோபம் நீர்த்து இருக்கும். நீங்கள் சொல்ல வேண்டியதை சரியாக சொல்வீர்கள். தவறான, தேவை இல்லாத வார்த்தைகளை விட மாட்டீர்கள்.
கோபம் தவிர்க்கும் பயிற்சி
ஏதோ ஒரு உடல் உழைப்பு தரும் பயிற்சிகளை அவசியம் செய்யுங்கள். தினமும் செய்வது நல்லது. இதனால், கோபம் அதிகம் வராது. ஸ்ட்ரெஸூம் இருக்காது.
வெளியே செல்லுங்கள்
குழந்தைகளுடன் அல்லது நீங்கள் மட்டும் தனியாக அருகில் எங்காவது பூங்கா, கடற்கரை போன்ற இயற்கை சூழலில் 1-2 மணி நேரம் இருந்து விட்டு வரலாம்.
வஞ்சம் வேண்டாம்
மன்னிப்பைவிட பெரிய ஆயுதம் உண்டா? நிச்சயம், இல்லை. உங்கள் மீது கோபப்பட்டவரை நீங்கள் மன்னித்து விட்டால், சில நாட்களில் கோபம் மறைந்து உங்களது உறவுகளும் பலப்படும். மன்னிப்பவன் மாமனிதன். அந்தப் பட்டம் உங்களுக்கே இருக்கட்டும்.
டென்ஷன் போக்க ஒரு வழி
மனதில் வஞ்சம் வைத்து நக்கலாக பேசுவதைத் தவிர்க்கவும். நகைச்சுவை உணர்வு பயன்படுத்தி, அந்தந்த டென்ஷனிலிருந்து வெளியே வரவும்.
ரிலாக்சேஷன் திறன்கள்
மனதில் நினைப்பதை பேப்பரில் எழுதுவது. பின்னர் கிழிப்பது. இசையைக் கேட்பது, யோகா ஆசனங்கள் செய்வது, தியானம் செய்வது. இப்படியான ரிலாக்சேஷன் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஆழ்ந்த மூச்சு
10-20 முறை ஆழ்ந்த மூச்சு விட்டால், ஓரளவுக்கு கோபம் குறையும். வயிற்றிலிருந்து வரும் கோபம், வயிற்றிலிருந்து இழுக்கப்படும் மூச்சால் குறைந்துவிடும். அதனால்தான் ஆழ்ந்த மூச்சு கோபத்தைக் குறைக்கிறது.
பிடித்ததை செய்யுங்கள்
பார்ப்பது, முகர்வது, தொடுவது, கேட்பது, சுவைப்பது என எதையாவது செய்தால் கோபம் குறையும். பிடித்தமான விஷயங்களைப் பார்ப்பது, கேட்பது. பிடித்த உணவுகளை சுவைப்பது. செல்லப் பிராணியை தொடுவது, விளையாடுவது. இப்படி ஏதாவது செய்யலாம்.
நிகழ்காலம் மட்டுமே நிஜம்
கடந்த கால பிரச்னைகளை மறுந்து விடுங்கள். அது கடந்து போயிற்று. நிகழ் காலத்தையும் எதிர்காலத்தையும் மனதில் வையுங்கள். இதனால் டென்ஷன் குறையும்.
எழுதி வையுங்கள்
எதெல்லாம் உங்களைக் கோபம் படுத்துகிறது என எழுதி வையுங்கள். எழுதி வைத்த பட்டியலில் எது முதல், இரண்டு என நம்பர் போட்டு ஆர்டர் செய்யுங்கள். இறுதியில் உள்ள எண்ணும் பிரச்னையும் பாருங்கள். அதைப் பார்த்து சிந்திக்கவும். இதற்கு கோபம் தேவையா தேவையில்லையா என எழுதி, அதற்கான விடையை கண்டுபிடியுங்கள். இப்படி அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும்.
எதையும் பர்சனலாக எடுக்க வேண்டாம்
எந்த விஷயத்தையும் இது எனக்கானது என எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த சூழல் இப்படியே இருக்காது. நிச்சயம் மாறும், காலம் அதை மாற்றும். தீர்வு கிடைக்கும். நம்பிக்கை கொள்ளுங்கள்.
புத்தர் சொன்ன ஒன்று
மற்றவர்கள் நமக்கு என்ன செய்யக் கூடாது என நினைக்கின்றோமோ. அதை நாமும் மற்றவர்களுக்கு செய்யக் கூடாது. இந்த ஒரு அறிவுரையை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினாலே, நமக்கு யாரும் தீங்கு செய்ய மாட்டார்கள். நாமும் பிறருக்கு தீங்கு செய்ய மாட்டோம்.