ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. கடந்த 27-ஆம் தேதி உக்ரைனில் உள்ள கிரெமென்சுக் வணிக வளாகத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வணிக வளாகத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் எதுவும் நடைபெற வில்லை என ரஷ்ய அதிபர் புதின் கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் கூறியதாவது, உக்ரைனில் உள்ள எந்த ஒரு இருப்பிடங்கள் மீதும் தாக்குதல் நடத்தவில்லை எனவும், சிவிலியன் பொருட்களின் மீது ரஷ்ய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்துவதில்லை எனவும், இதற்கான அவசியம் இல்லை எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து எங்களிடம் இருக்கும் இலக்குகளை குறிவைத்து தாக்க கூடிய நவீன ஆயுதங்கள் மூலம் எங்களுடைய இலட்சியத்தை நாங்கள் அடைகிறோம் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் வணிக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா சபைக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்திருந்தது. அந்த கோரிக்கைக்கு இணங்க ஐ.நா சபையில் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் துணை நிரந்தர பிரதிநிதி ஆர்.ரவீந்திரா கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது, போரின் காரணமாக உக்ரைனில் உள்ள வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். இந்தப் போரினால் ஏராளமான மக்கள் தங்களுடைய வீடுகளை இழந்து அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இந்த போரில் அதிக அளவில் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மக்கள் மட்டும் தான் என்றார். மேலும் உக்ரைன் மற்றும் ரஷ்யா போரினால் உலக அளவில் பல நாடுகளில் உணவு, உரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருள்களை விலை அதிகரித்து வருகிறது. இது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.