உக்ரைன் மீது கடந்த 24-ஆம் தேதி ரஷ்யா ஆக்ரோஷமான போர் தொடுத்தது. இப்போர் நேற்று 13-வது நாளாக நீடித்து வந்தது. இதனால் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையில் அவர்களை இந்திய அரசு பல வழிகளில் மீட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய மாணவர் ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து, ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலில் பங்கேற்று இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த மாணவர் இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கோவை சுப்பிரமணியம் பாளையம் சுவாதி கார்டனை சேர்ந்த ரவிச்சந்திரன் (52) பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஜான்சி லட்சுமி என்ற மனைவியும், சாய்நிகேஷ் (22), சாய்ரோஷித் ஆகிய 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் சாய்நிகேஷ் காரமடையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 வரை பயின்றார். இவர் சிறுவயதில் இருந்தே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விருப்பப்பட்டார். அந்த அடிப்படையில் சாய்நிகேஷ் 2 தடவை முயன்றும் உயரம் குறைவாக இருந்ததால் இந்திய ராணுவத்தில் சேருவதற்கு இயலவில்லை. அதன்பின் அவர் அமெரிக்க ராணுவத்தில் சேர விரும்பி சென்னை தூதரகத்தை அணுகிய நிலையில், அதிலும் சாய்நிகேசுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
அதனை தொடர்ந்து அவர் கடந்த 2019 ஆம் வருடம் உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரிலுள்ள நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலை விமானவியல் துறையில் சேர்ந்து பயின்று வந்தார். இதனிடையில் அவருக்கு உக்ரைனில் உள்ள வீடியோ கேம் டெவலப்மெண்ட் நிறுவனத்தில் பகுதிநேர வேலை கிடைத்து இருப்பதாகவும், படித்துக் கொண்டே வேலை செய்து வருவதாகவும் செல்போனில் தன் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்தால் அங்குள்ள பதற்றமான சூழல் ஏற்பட்டதால் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தங்களின் நாடுகளுக்கு செல்ல தொடங்கினர்.
இது போன்று சாய்நிகேசையும் ஊருக்கு வந்து விடுமாறு பெற்றோர் அழைத்தனர். அப்போது சாய்நிகேஷ் ஜார்ஜியா நேஷனல் லெஜியன் துணை ராணுவபிரிவில் சேர்ந்துவிட்டதாகவும், ரஷ்யாவுக்கு எதிராக தான் போரிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே இந்தியா திரும்புமாறு அவரை அழைத்துள்ளனர். இருப்பினும் அவர் தான் பாதுகாப்பாக உள்ளதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். எனினும் நிம்மதியடையாத பெற்றோர் மகனை மீட்டு தர வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறைக்கு இ-மெயில் மூலமாக தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.
முதற் கட்டமாக சாய்நிகேஷின் பெற்றோரிடம் விசாரித்தபோது, வருகிற ஜூலை மாதம் படிப்பு முடிந்து நாடு திரும்புவான் என்று நம்பி இருந்த நிலையில், போர் நடைபெறும் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து இருப்பதால் தங்களின் மகனின் நிலை தொடர்பாக பெற்றோர் கவலை அடைந்து உள்ளனர். உக்ரைனில் போர் நடந்து வருவதால் மகனின் நிலை தொடர்பாக பரிதவித்து வருவதாகவும், எந்த கருத்தையும் கூறவிரும்பவில்லை எனவும் சாய்நிகேஷின் பெற்றோர் தெரிவித்தனர். உக்ரைன் போர் பதற்றம் காரணமாக இந்திய மாணவர்கள் நாடு திரும்பும் நிலையில், சாய்நிகேஷ் மட்டும் இங்கு வராமல் அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்து ஆதரவாக போர் புரிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சாய்நிகேஷ் போன்று இந்திய மாணவர்கள் வேறு யாராவது உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துஇருக்கிறார்களா? என்று மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.