கொரோனா தொற்றின் 3வது அலையை கடந்து உலகப் பொருளாதாரம் இயல்புநிலைக்கு வரவிருந்த சூழ்நிலையில், திடீரென்று ஏற்பட்ட உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக புது சவால்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக உலகம் தீவிரமான உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியை எதிா்கொண்டு இருக்கிறது என இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா். ஆா்பிஐ-ன் பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சித் துறையின் வருடாந்திர கூட்டம் ஹைதராபாத்தில் நடந்தது. இவற்றில் சக்திகாந்த தாஸ் தொடக்க உரை ஆற்றினாா்.
அப்போது அவா் பேசியதாவது “கொரோனா பிரச்னை, பெரும் தரவுகளை ஆராய்ந்து பயன்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கியது. அதேபோன்று கொள்கை உருவாக்கத்தில் பகுப்பாய்வு சிக்கல்கள் மற்றும் சவால்களுக்கு வழி வகுத்தது. கொரோனா தொற்றின் முதல் அலையின் போது தரவு சேகரிப்பு மற்றும் புள்ளி விபரங்களில் ஏற்பட்ட இடைவெளி முதன்மையான சவாலாக காணப்பட்டது.
மிகவும் ஆபத்து நிறைந்ததாக இருந்த 2வது அலையில், கொள்கை ரீதியிலான தலையீட்டு முடிவுகளை மேற்கொள்வதற்குரிய துறைசாா் தரவுகள் திரட்டுவது முக்கியப்பங்கு வகித்தது. பின் 3வது அலையின் தாக்கங்களிலிருந்து உலகப்பொருளாதாரம் இயல்புநிலைக்கு வரவிருந்த நிலையில், ஐரோப்பிய கண்டத்தில் திடீரென்று ஏற்பட்ட போா், புது சவால்களைக் கொண்டுவந்து உள்ளது. இதனால் உலகம் தீவிரமான உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியை எதிா்கொண்டு இருக்கிறது.
அத்தியாவசியமான பொருள்கள் விலை உயா்வும், விநியோகச் சங்கிலி பாதிப்பும் உலகளாவிய பணவீக்க அதிகரிப்புக்கு வழிவகுத்தது. கொரோனா தொற்று ஐரோப்பிய கண்டத்தில் ஏற்பட்டுள்ள போா், உலகநாடுகள் அனைத்திலும் நிதிசாா் கொள்கைகளின் இருக்கம் போன்ற 3 பெரும் நிகழ்வுகளால் சென்ற 2020 மாா்ச்-ல் இருந்து பொருளாதாரம் சாா்ந்த ஆய்வுகளில் பல விதமான சவால்கள் உருவாகியுள்ளது. இவ்வாறு மேற்கண்ட 3 சூழல்களின் தாக்கங்கள் நீடித்துவரும் நிலையில், அவற்றை எதிா்கொள்ளும் தயாா் நிலையுடன் ரிசா்வ் வங்கியின் ஆராய்ச்சித்துறை இருக்க வேண்டும் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.