பிரபல நாட்டின் 2 மாகாணங்களை வடகொரியா சுதந்திர நாடாக அங்கீகரித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் கிழக்கே டொனெஸ்ட்க், லுகான்ஸ்க் ஆகிய 2 மாகாணங்கள் அமைந்துள்ளது. இந்த 2 மாகாணங்களிலும் ரஷ்ய வம்சாவளியினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளைச் சேர்ந்த சில கிளர்ச்சி குழுக்கள் உக்ரைனுக்கு எதிராக பல ஆண்டுகளாக ஆயுத போராட்டம் நடத்தி வருகிறது. இதற்கு ரஷ்யாவும் ஆதரவு அளித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது போரை தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய 2 பகுதிகளையும் தனி நாடாக அதிபர் புதின் அறிவித்தார். இதை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அதிபர் புதின் வலியுறுத்தினார். ஆனால் சிரியா உள்ளிட்ட ஒரு சில நாடுகள் மட்டுமே அதிபர் புதினின் அறிவிப்பை ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில் வடகொரியா உக்ரைனுக்கு சொந்தமான 2 மாகாணங்களையும் சுதந்திர நாடாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வடகொரியா வெளியுறவு மந்திரி சோ ஷன் ஹுய் 2 மாகாணங்களின் கிளர்ச்சி குழு தலைவருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் 2 நாடுகளின் சுதந்திர உரிமையை வடகொரியா ஏற்றுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் வடகொரியா உடன் இருக்கும் தூதரக உறவுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் வட கொரியாவின் முடிவு உக்ரைன் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்பதாக இருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.