உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. சென்ற ஒரு மாதத்தைக் கடந்தும் ரஷ்ய படைகளின் தாக்குதல் நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் முக்கியமான நகரங்களை கைப்பற்றவில்லை. அதிலும் குறிப்பாக தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற நகரங்களைக் கைப்பற்ற ரஷ்ய ராணுவம் கடுமையாக தாக்குதல்களை மேற்கொண்டது. எனினும் ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே உக்ரைனின் புச்சா நகரிலுள்ள ஒரு வெகுஜன புதைக்குழியில் ஏறத்தாழ 300 நபர்கள் புதைக்கப்பட்டதாகவும், அந்நகரம் முழுதும் சடலங்கள் சிதறிக்கிடப்பதாகவும் அந்நகர மேயர் தகவல் தெரிவித்து இருந்தார். அங்கு தெருக்களில் வைத்து உள்ள குப்பைகொட்டும் தொட்டிகளில் பொதுமக்களில் 20 நபர்களின் உடல்கள் போடப்பட்டிருப்பது போன்ற படங்களுடன் வெளியாகியது.
அவர்கள் மோசமான நிலையில் கொல்லப்பட்டு கிடந்ததாகவும், சிலபேரது கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்ததாகவும் ஊடகத்தகவல்கள் தெரிவிக்கிறது. புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் குப்பைத்தொட்டிகளில் வீசப்பட்டு இருப்பதற்கு உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் உக்ரைனின் புச்சா நகரில் நடைபெற்ற படுகொலைகளுக்கு ஐநாவில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து ஜநாவில் இந்திய பிரதிநிதி திருமூர்த்தி பேசியபோது “உக்ரைனில் நிலைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதையும் காட்டவில்லை. இதில் புச்சாவில் பொதுமக்கள் படுகொலைகள் குறித்து சமீபத்திய அறிக்கைகள் மிகுந்த கவலையளிக்கிறது. இந்த கொலைகளை நாங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்கிறோம் மற்றும் சுதந்திரமான விசாரணைக்கான அழைப்பை ஆதரிக்கிறோம்.
உக்ரைனிலுள்ள மோசமான மனிதாபிமான நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் மருந்துகள் மற்றும் மற்ற அத்தியாவசிய நிவாரண பொருட்கள் உட்பட மனிதாபிமான பொருட்களை அனுப்பி வருகிறது. வருகிற தினங்களில் உக்ரைனுக்கு இன்னும் அதிகமான மருத்துவப்பொருட்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியா தொடர்ச்சியாக மோசமடைந்து வரும் நிலையில் மிகுந்த கவலையில் இருக்கிறது. ஆகவே வன்முறையை உடனே நிறுத்தவும், விரோதப்போக்கை நிறுத்தவும் தன் அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறது. இராஜதந்திரம் மற்றும் உரையாடலின் பாதையைத் தொடர வேண்டியதன் அவசியத்தை மோதலின் தொடக்கத்தில் இருந்தே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்’ என்று அவர் கூறினார்.