உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர்களில் 1,500 மாணவர்களின் தகவல்கள் முழுமையாக கிடைத்துள்ளதாக மாநில தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் மீட்பு அழைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான மாநில தொடர்பு அதிகாரி ஜெசிந்தா கூறிய போது, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்காக சென்னை எழிலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் மற்றும் 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட ஈமெயில் வந்துள்ளன. இதன் மூலமாக உக்ரைனில் சிக்கி தவிக்கும்1,500 தமிழ் மாணவர்களின் முழுமையான தகவல்கள் கிடைத்துள்ள.
அவர்கள் உக்ரைனில் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த பல்கலைக்கழகங்களில் பிடிக்கின்றனர் என்பது பற்றிய முழுமையான தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் மத்திய வெளியுறவுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உக்ரைனிலிருந்து அதிகளவிலான மக்கள் வெளியேறுவதனால் அங்கு பெரிய அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள தமிழர்கள் ரூமேனியா, போலந்து, ஹங்கேரி போன்ற அருகில் உள்ள நாடுகள் மூலமாக மீட்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அங்கு போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தமிழர்கள் தங்கியுள்ள இடத்தில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அங்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே உடனடியாக உணவு கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.போர் நடைபெற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக உக்ரைனில் இருந்து ரஷியாவிற்குள் நுழைவதற்கு அனுமதி கிடைக்காது. தூதரக அதிகாரிகள் மூலம் இந்தியர்களுக்கு மட்டும் நுழைவதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டும் என அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் அவர் கூறியுள்ளார்.