ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடைபெற்று வரும் போரில் பிற நாட்டினர் யாரேனும் தலையிட்டால் அவர்கள் இதுவரையிலும் காணாத மோசமான அழிவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையில் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பதற்றம் 3-வது நாளாக நீடித்து வருகிறது. தற்போது ரஷ்ய படை வீரர்கள் உக்ரைனை 3 திசைகளிலும் சுற்றிவளைத்து தலைநகர் கீவ்வை ஆக்கிரமிக்க கடும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கோகுல் என்ற மாணவர் உக்ரைனில் இருந்து விமானம் மூலம் தமிழகம் திரும்பியுள்ளார். போர்ச் சூழலால் இந்தியர்களை தாயகம் திரும்பும்படி இந்திய அறிவித்த அன்றே விமானத்தில் முன்பதிவு செய்து, 24ஆம் தேதி சென்னை வந்தடைந்த இவர், நேற்று பழனிக்கு வந்துள்ளார். சென்னையில் இறங்கும்போது போர் தொடங்கியதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.