அதிமுகவின் கட்சி போஸ்டரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அம்மா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து கட்சியை வழிநடத்தி சென்றனர். இந்த சூழலில் திடீரென அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுக்கவே, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி துருவங்களாக மாறி ஒருவருக்கு ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவோடு இபிஎஸ் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இதனால் ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கே.பி முனுசாமி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாக உத்தரவிட்டார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பெண் பிரமுகர் தமிழரசி தொடர்ந்து இபிஎஸ்-ஐ எதிர்த்து பல போஸ்டர்களை ஒட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழரசி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளார். அதில் இபிஎஸ் கட்சியின் பொதுச்செயலாளர் என்றால், அம்மாவாகிய நான் யார்? என்று அம்மா கேட்பது போல் இருக்கிறது. இந்த போஸ்டரால் அதிமுக கட்சியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.