புதுச்சேரியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்பவர்கள், அந்தந்த மாநிலங்களிடம் விண்ணப்பித்து செல்ல வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணத்தால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு வந்து செல்ல இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு, மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளது. அதனடிப்படையில் கடந்த 23ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையை புதுச்சேரி அரசு கைவிட்டது.
அதற்கான அறிவிப்பு இணையதளம் மூலமாக வெளியிடப்பட்டது. இருந்தாலும் தமிழகம் போன்ற பல்வேறு மாநிலங்களில் பாஸ் நடைமுறை தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. புதுச்சேரியில் இ-பாஸ் வழங்கப்படாததால், அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் வெளிமாநிலங்களுக்கு செல்வதில் பெரும் சிக்கல் உண்டாகியுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ” மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது.
வெளிமாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களுக்கு எல்லையில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் விண்ணப்பித்து அவர்கள் வழங்கக்கூடிய இ-பாஸ் மூலமாக அந்த மாநிலங்களுக்கு செல்லலாம்” என்று அவர் கூறியுள்ளார்.