கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் தாலுகா அலுவலகத்தில் ஆதார் இ-சேவை மையம் சென்ற சில வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இச்சேவை மையத்தில் கடந்த சில நாட்களாக கம்ப்யூட்டர் சரியாக இயங்காமல் இருக்கிறது. அதேபோன்று பணியாளர்கள் பற்றாக்குறையும் நிலவிவருகிறது. இதன் காரணமாக சேவை மையம் சரியான முறையில் இயங்காமல் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இ-சேவை மையத்தை தேடிவரும் பள்ளி- கல்லூரி மாணவர்கள் முதல் அனைத்துதரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நேற்று முன்தினம் காலை இந்த மையத்துக்கு மாணவர்கள் உட்பட பலர் வந்தபோது, அது மூடிக்கிடந்தது.
இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அவர்கள் அலுவலகத்தின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இன்று முதல் இ-சேவை மையம் செயல்படும் என தெரிவித்தனர். அதன்பின் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தற்போது அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களது மேற்படிப்பை தொடரும் விதமாக வருமான சான்று, வசிப்பிட சான்றிதழ் உட்பட பலவகையான சான்றிதழ்களை பெறுவதற்காக பெரும்பாலானவர்கள் இந்த மையத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இந்த இ-சேவை மையம் செயல்பட வழிவகை செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.