பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரதமராக இருந்த இம்ரான் கான் சென்ற ஏப்ரல் மாதம் பதவியிழந்தார். அவ்வாறு பதவி இழந்த முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தான். அவர் பதவி இழந்ததை அடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்துமாறு கோரி வருகிறார். இதுகுறித்து பேரணி, பொதுக்கூட்டம் என்று நடத்தி வருகிறார். அந்த அடிப்படையில் நாளை (ஜூலை 2) அவர் இஸ்லாமாபாத்தில் அணி வகுப்பு மைதானத்தில் பிரமாண்ட பேரணி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்.
இதற்கு அனுமதி வழங்க உத்தரவிடவேண்டும் என கேட்டு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில், பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் கட்சி மனுதாக்கல் செய்துள்ளது. அதில், தங்களது பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டு, இஸ்லாமாபாத் போலீஸ் துணை கமிஷனருக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும், ஆனால் அவர் அனுமதி தராமல் தாமதம் செய்வதாகவும் கூறி, அனுமதிதர உத்தரவிடக்கோரி இருக்கின்றனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.