இஸ்ரேல் பாலஸ்தீனிய மோதலில் பாலஸ்தீனிய சிறுவன் கையெறி குண்டு வெடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் கடந்த பல வருடங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை ஹமாஸ் அமைப்பும், மேற்கு கரை பகுதியை பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸும் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதும் ஹமாஸ் போன்று பல ஆயுதமேந்திய குழுக்களும் செயல்பட்டு வருகிறது. அதே சமயம் மேற்கு கரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவ்வபோது பாலஸ்தீனிய ஆயுத குழுக்களுக்கும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடைபெறுவது வழக்கம்.
குறிப்பாக மேற்கு கரையில் ஜெனின், நப்லஸ் ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக அடிக்கடி சண்டைகள் நடைபெறுகிறது. இந்நிலையில் நப்லஸ் நகரில் பலடா அகதிகள் முகாம் அருகே இருக்கும் ஜோசப் ஷ்ரேன் வழிபாட்டு தலத்திற்கு இஸ்ரேலியர்கள் சென்றுள்ளனர். அப்போது இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பலடா அகதிகள் முகாமைச் சேர்ந்த மஹ்டி ஹஷாஷ்(15) என்ற பாலஸ்தீனிய சிறுவன் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இஸ்ரேல் படையினர் மீது கையெறி குண்டை வீச முயன்றான். அப்போது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்து படுகாயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.