இஸ்ரேலில் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் கோஷெர் போன் தொடர்பாக அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை மந்திரி கூறிய கருத்தால் பழமைவாத மத தலைவர்கள் ஆத்திரமடைந்து இருக்கின்றனர். இதனால் ஸ்மார்ட் போன் விற்பனை கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிலுள்ள யூதர்கள் மிகவும் மதத்தில் தீவிரபற்று கொண்டவர்கள். இவர்கள் ஸ்மார்ட் போன் உபயோகத்தை வெறுக்கின்றனர். இஸ்ரேலில் மொத்தம் உள்ள 16 % யூதர்களில், ஹரிடி எனப்படும் பழமைவாத பிரிவினர் 12.6 % ஆகும். இப்பிரிவினரின் வாரிசுகள் மதம்சார்ந்த படிப்புகளை மட்டுமே படிக்கின்றனர். இவர்கள் அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதில்லை.
இந்த நிலையில் ஸ்மார்ட் போனுக்கு மாற்றாக கோஷெர் எனும் போன் (சாதாரண செல்போன்) அறிமுகம் செய்யப்பட்டது. இஸ்ரேலில் சுமார் 5 லட்சம் கோஷெர் போன்கள் உபயோகப்படுத்தப்படுவதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இவற்றில் ஒருவருக்கொருவர் பேச மட்டுமே முடியும். அதாவது குறுஞ்செய்தி அனுப்புவதோ (அல்லது) வீடியோ காட்சிகள் மற்றும் வானொலி, இணையதள இணைப்பு ஏதும் இல்லை. இந்த போனின் பயன்பாடு தொடர்பாக பேசிய தகவல் தொடர்புத்துறை மந்திரி, ”இதை உபயோகிப்பதற்கு பைபிள் போன்ற நூலைப் படித்து அறிந்துகொண்டிருப்பதைப் போன்று எவ்வித அறிவும் தேவையில்லை” என அவர் கூறினார். இது மதபழமைவாதிகள் (ஹரிடி யூதர்கள்) மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.