தூதரக ஒப்பந்தம் கையெழுத்து எதிரொலியாக இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையில் தொலைபேசி சேவை தொடங்கி இருக்கிறது.
இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையில் தூதரக நல்லுறவை ஏற்படுத்துவதற்கான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. இந்த மூன்று நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், மூன்றாவது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் இருக்கின்றது.
இந்த ஒப்பந்தத்திற்கு துருக்கி மற்றும் ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்த ஒப்பந்தம் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என்று அமெரிக்காவும், ஐக்கிய அரபு அமீரகமும் கூறிவருகின்றது. மேலும் இந்த ஒப்பந்தத்திற்கு ஐ.நா.வும், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் வரவேற்பு அளித்துள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே உள்ள தூதரக ஒப்பந்தத்தின் முதல்படியாக இரு நாடுகளுக்கும் இடையில் தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தலைநகர் அபுதாபியில் இருக்கின்ற சர்வதேச பத்திரிக்கையாளர்கள் லேண்ட்லைன் தொலைபேசி வாயிலாக ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டதாக கூறியுள்ளன.