இஸ்ரேலுடன் தூதரக ஒப்பந்தம் செய்துகொண்ட விவகாரம் குறித்து ஐக்கிய அரபு அமீரக துணை தூதரக உறவை துண்டிக்க துருக்கி பரிசீலனை செய்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையில் தூதரக நல்லுறவை பேணுவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி இருக்கிறது. அந்த ஒப்பந்தத்திற்கு ஐநா வரவேற்பு அளித்துள்ளது. மேலும் அமெரிக்கா, சீனா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் பாராட்டி வருகின்றன. அதேசமயத்தில் ஈரான், துருக்கி மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவினை துண்டிப்பது பற்றி பரிசீலனை செய்து வருவதாக துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ” மத்திய கிழக்கில் அதிரகம் மற்றும் அரசியலின் சம நிலையை மாற்றியமைக்கும் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதன் மூலமாக ஐக்கிய அரபு அமீரகம் வரலாற்றுப் பிழையை செய்திருக்கிறது. அதனால் ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவுகள் அனைத்தையும் நிறுத்திவைக்க அல்லது அங்குள்ள எங்கள் தூதரை திரும்ப அழைப்பது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும் என வெளியுறவுத் துறை மந்திரியிடம் கூறியிருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.