தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை தனியார் சிலர் ஆக்கிரமித்து இருக்கின்றனர். அதாவது போலியாக ஆவணங்கள் தயார் செய்து தங்களது பெயருக்கு பத்திரப் பதிவு செய்து, அதனடிப்படையில் விற்பனை செய்வதிலும் ஈடுபடுகின்றனர். இதற்கிடையில் தனியாரால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை, அறநிலையத்துறை முடுக்கி விட்டுள்ளது. அந்த அடிப்படையில் கோவில் நிலங்களின் பட்டாவில் “T” எனும் ஆங்கில எழுத்தை அடையாளமாக குறிப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து மோசடி பத்திரங்களை தடை செய்வதற்க்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், தானமாக வழங்கப்பட்ட நிலங்கள், கோவில் பெயரிலுள்ள பட்டா நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் என்று 3 வகையாக பிரிக்கப்படுகின்றன. இந்த நிலங்களை பாதுகாக்க வேண்டியது சார்- பதிவாளர்களின் கடமை ஆகும்.
ஆகவே சார்- பதிவாளர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இந்நிலங்கள் வேறு பெயர்களில் மோசடியாக பதிவாகி இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
அவ்வாறு பதிவான பத்திரங்கள் தொடர்பான விபரங்களை மாவட்ட பதிவாளருக்கு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட பத்திரம் ரத்து செய்யப்படும். இது தொடர்பாக பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியபோது, கோவில் நிலங்கள், தவறான முறையில் வேறு ஒருவர் பெயருக்கு பதிவாகி இருப்பது தெரியவந்தால் உடனே சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர்கள் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே சார்- பதிவாளர்களின் மூலமாக வரும் இதுபோன்ற புகார்களை பரிசீலினை செய்து மோசடி பத்திரங்களை ரத்து செய்வதற்க்கான உரிமம் மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கோவில் நிலங்கள் குறித்த சர்வே எண் விபரங்களை, சார் – பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்தந்த பகுதி கோவில்களின் நிர்வாகிகள் இந்த விஷயத்தில் உரிய புகார்களை சார்-பதிவாளர், மாவட்ட பதிவாளர்களிடம் கூற முன்வர வேண்டும் என்று அவர் கூறினார்.