திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேடசந்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் குபேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் பழனிச்சாமி, ஜெயராஜ், குழந்தை, குமரேசன் ஆகியவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குடும்ப பஸ்பாஸ் வாங்குவதற்காக குபேந்திரன் வேடசந்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த குமரேசன், ஜெயராஜ், குழந்தை, பழனிச்சாமி ஆகியோர் குபேரனை மோசமாக தாக்கியுள்ளனர். இதில் குபேந்திரனுக்கு மோசமான காயங்கள் ஏற்ப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் குபேந்திரன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால் காவல்துறையினர் இரண்டு நாட்கள் ஆகியும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வேடசந்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், குபேந்திரனை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் கண்டக்டரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.