புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுனர் தனது விடா முயற்சியால் காவலர் தேர்வில் வெற்றி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பத்து ஆண்டுகளுக்குப் பின் காவலர் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக உடல்தகுதி தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டிருந்தது. இந்த உடல் தகுதி தேர்வில் 2,644 பேர் தேர்வு தகுதி பெற்றனர். மேலும் மிக விரைவாக திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் மார்ச் 26ஆம் தேதி அதிகாலை வெளியிடப்பட்டிருந்தது.
காவல்துறை தேர்வில் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஏராளமானோர் தேர்வாகி இருக்கிறார்கள். இதில் புதுச்சேரி ஜீவா நகரை சேர்ந்தவர் கந்தன்(31). இவருக்கு சிறு வயதிலிருந்தே காவலராக வேண்டும் என கனவு இருந்திருக்கிறது. ஆனால் குடும்ப வறுமை காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து விட்டு உயர்கல்வியில் சேர வழி இல்லாத காரணத்தினால் தொழிற்கல்வியான ஐஐடி தேர்ந்தெடுத்த போதும் பெற்றோரால் கல்வி செலவை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டதால் 2013 முதல் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணமாகி அவருக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் காவலர் பணிக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இம்முறை எப்படியாவது தனது கனவை நனவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆட்டோ ஓட்டிக் கொண்டே உடலை தகுதி செய்துகொண்டு, எழுத்துத் தேர்வுக்கும் தயாராகியுள்ளார். பல்வேறு இன்னல்கள் வந்த போதிலும் தனது விடா முயற்சியால் உடல் தகுதித் தேர்வில் அவர் தேர்வாகியுள்ளார்.
மேலும் எழுத்துத் தேர்விலும் தேர்வாகியுள்ளார். தனது விடா முயற்சியால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.