சீமான் கையெழுத்து போட்டால் வெளிநாடுகளில் குடியுரிமை கிடைக்கும் என்று அவர் பேசிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம் ஆக்ரோஷம் கொண்டு மேடைகளில் பேசுபவர். அவரின் பேச்சைக் கேட்பதற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவர் பேசும் பேச்சுகள் அனைத்தும் சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இது ஒருபுறமிருக்க அவர் பேசிய பல கருத்துக்கள் விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் சீமானை அனைவரும் பாஜகவின் ‘பி’ டீம் என்று பல விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டு வருகின்றது.
தற்போது தீபாவளியை முன்னிட்டு ஒரு பிரபல செய்தி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார். அதில் சீமான் கையெழுத்துப் போட்டால் கனடா போன்ற நாடுகளில் குடியுரிமை தருவதாக சொல்கிறார்களே அது உண்மையா என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப? ஆமாம் உண்மைதான். அரசியல் இயக்கம் வைத்து மக்கள் பணி செய்து கொண்டிருக்கிறேன் என்பதை மதித்து குடியுரிமை வழங்குகிறார்கள் என்று தெரிவித்தார். அது எப்படி இன்னொரு நாடு உங்கள் கையெழுத்தை போட்டால் குடியுரிமையை ஏற்கும் என்று கேள்வி கேட்க? அது எனக்கு தெரியாது. ஆனால் நான் கையெழுத்துப் போட்டு கொடுத்ததால் குடியுரிமை பெற்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை வேண்டும் என்றால் உங்களிடம் பேச சொல்லவா? என்று அவர் பதிலளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.