12-ம் வகுப்பு படித்துமுடித்த மாணவர்கள் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வை எழுதி அதன் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். அந்த மாணவர்கள் முன்னெச்சரிக்கையாக வேறு பாடப் பிரிவை தேர்ந்தெடுந்து தனியார் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கின்றனர். ஒருவேளை நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வு முடிவுகள் வேறு மாதிரியாக வரும் பட்சத்தில் ஏற்கனவே சேர்ந்த கல்லூரியில் தொடருவார்கள். அந்த முடிவுகளுக்கு ஏற்றவாறு மருத்துவம், என்ஜினியரிங் உள்ளிட்ட பாடங்களில் கிடைக்கும் உயர்மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துவிடுவார்கள். அந்த நேரத்தில் சில கல்லூரிகள் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை திரும்பித்தருவதில்லை என்ற குற்றச்சாட்டு பெறப்பட்டது. இந்த புகார் யுஜிசி கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இது தொடர்பாக பரிசீலித்த யுஜிசி, அக்டோபர் 1ம் தேதிக்குள் சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை கல்லூரி நிர்வாகங்கள் முழுமையாக திருப்பிக்கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. சேர்க்கையை ரத்துசெய்வதற்கு என்று தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் அ றிவுறுத்தியுள்ளது. யுஜிசி-யின் இந்த உத்தரவு நாடு முழுதும் இருக்கும் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சில கல்வி நிறுவனங்கள் சேர்க்கையை ரத்துசெய்வதற்காக செலுத்திய கட்டணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்வதாகவும் புகார் எழுந்தது. இந்த நிலையில் யு.ஜி.சி இந்த உத்தரவையும் பிறப்பித்திருக்கிறது. யுஜிசியின் இந்த புது உத்தரவு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.