Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஏபி.டி வில்லியர்ஸுடன் ஒப்பிடுவதா?….. “அவ்ளோ பெரிய ஆள் இல்ல”…. ரிக்கி பாண்டிங்கிற்கு பதிலடி கொடுத்த பாக் வீரர்..!!

சூர்யகுமார் யாதவை ஏபி டி வில்லியர்ஸுடன் ஒப்பிடுகிறீர்களா? என்று ரிக்கி பாண்டிங்கின் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்..

இளம் வயதிலேயே பெரும்பாலான வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி தங்களது நாட்டுக்காக சிறப்பாக ஆடி அணியில் நிரந்தர இடம் பிடிப்பார்கள். ஆனால் சிலர் வந்த வேகத்தில் அப்படியே பின்னுக்கு சென்று விடுவார்கள். தொடக்கத்தில் நன்றாக ஆடி இருப்பார்கள். அதன்பின் அவர்கள் ஆட்டம் சிறப்பானதாக இல்லை எனில் காணாமல் போய்விடுவார்கள். சிலர் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக அசத்துவார்கள்.. அந்த வரிசையில் சூர்யகுமார் யாதவ் 30 வயதை கடந்து இந்திய அணியில் அறிமுகமானார். இவர் தற்போது சிறப்பாக ஆடி நட்சத்திர அந்தஸ்தை பெற்று வருகிறார். முன்னதாக உள்ளூர் போட்டி மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த போது இவரை தேர்வு குழு கண்டு கொள்ளவில்லை.. ஒரு வழியாக தனது 30 வயதுக்கு மேல் இந்திய அணியில் இடம் பிடித்து குறுகிய காலத்திலேயே மேட்ச் வின்னராக மாறி இருக்கிறார்.

ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் மிடில் ஆர்டரில் நான்காவது இடத்தில் களம் இறங்கும் இவரால் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி தன்னுடைய அதிரடியான ஆட்டத்தால் ரன்களை குவித்து வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதன் காரணமாக வெள்ளை பந்து இந்திய அணியில் நிரந்தர இடத்தை தற்போது பிடித்துள்ளார்.. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் டி 20 தொடரில் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைத்த போது ஆரம்பத்தில் தடுமாறினார்.. அதன் பின் மூன்றாவது போட்டியில் அதிரடியாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்து தன்னால் அனைத்து இடங்களிலும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று நிரூபித்து காட்டினார்.

மேலும் அவர் அணியில் இடம் பிடித்து ஒரு வருடமே ஆகி இருந்தாலும் பெரும்பாலான போட்டிகளில் தென்னாப்பிரிக்க ஜாம்பவானான ஏபி டிவில்லியர்ஸ் போலவே மைதானத்தின் எல்லா திசைகளிலும் விதவிதமாக சாட்டுகளை அடிக்கும் திறமையை அவர் பெற்றுள்ளார்.. அதனை நிறைய போட்டிகளில் வெளிப்படுத்தி உள்ளார். இதனால் இந்திய ரசிகர்கள் அவரை வெளிப்படையாக இந்தியாவின் ஏபிடி, இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கிறார்கள்..

இந்நிலையில் தனது உச்சகட்ட பார்மில் இருக்கும்போது சூர்யகுமார் யாதவ் சற்று ஏபி டிவில்லியர்ஸ்ஸை போலவே மைதானத்தின் அனைத்து திசையிலும் அதிரடியாக விளையாடுகிறார் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் கேப்டன் ரிக்கி பாண்டிங் நேற்று ஐசிசி இணையதளத்தில் பாராட்டி பேசி இருந்தார். மேலும் அவர் திறமை வாய்ந்த அவரை ஓபனிங் வீரராக களம் இறக்காமல் அவருக்கு மிகப் பிடித்த நான்காவது இடத்தில் தொடர்ந்து விளையாட வாய்ப்பு கொடுத்தால் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று ஆலோசனை கூறியிருந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு அறிமுகமாகி இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட தொடங்கி உள்ளார் என்பதற்காக நீண்ட காலம் யாருமே நினைத்துக் கூட பார்க்காத வகையில் சிறப்பாக விளையாடி புதிய ஷாட்டுகளை அறிமுகப்படுத்திய தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏ.பி.டி வில்லியர்ஸ் உடன் சூரியகுமார் யாதவை ஒப்பிட்டு பேசுவதில் எந்த அடிப்படையும் கிடையாது என்று ரிக்கி பாண்டிங் கருத்துக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் அளித்த பேட்டியில், ஏபிடி வில்லியர்ஸ் கிரிக்கெட் விளையாடியதைப் போலவே சமீபத்திய வரலாற்றில் யாருமே விளையாடியதாக எனக்கு தெரியவில்லை. அவரை அவுட் செய்யவில்லை என்றால் நம்மால் வெற்றி பெறவே முடியாது என்று எதிர் அணியினர் பயப்படுகின்ற அளவிற்கு கிரிக்கெட்டில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒருவர். மேலும் ஜோ ரூட், கேன் வில்லியம்சன் மற்றும் விராட் கோலி உள்ளிட்ட சிறந்த வீரர்களும் ஏராளமான சதங்களை அடித்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன்களாக மட்டுமே தங்களை நிரூபித்துள்ளார்கள். ரோகித் சர்மா ஒரு நாள் போட்டியில் 250 ரன்கள் எடுத்துள்ளார். ஆகவே ரிக்கி பாண்டிங் ஒருவேளை அதிவேகமான ஜெட் போன்ற கனவு கண்டிருக்கலாம்.

சூர்யகுமார் யாதவ் இப்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்துள்ளார். நல்ல திறமை உள்ள அவர் சிறப்பாக ஆடி வருகிறார். ஆனால் அதற்காக அவரை நேரடியாக ஏபி டி வில்லியர்ஸுடன் ஒப்பிடுகிறீர்களா, தென்னாப்பிரிக்காவின் பழம்பெரும் வீரருடன் ஒப்பிடும் முன், பெரிய போட்டிகளில் யாதவ் தனது தகுதியை நிரூபிக்க பாண்டிங் கொஞ்சம்  காத்திருந்திருக்க வேண்டும் என நான் சொல்வேன். அவர் இன்னும் ஐசிசி போன்ற பெரிய போட்டிகளில் விளையாட வில்லை.. சொல்லப்போனால் ஏபிடி வில்லியர்ஸை போல விளையாட இங்கு யாருமே கிடையாது. ஏபி டி வில்லியர்ஸ் போன்ற ஒரு வீரர் இதுவரை இருந்ததில்லை என்பதுதான் உண்மை. வேண்டுமென்றால் நீங்கள் அவரை விவ் ரிச்சர்ட்ஸ்ஸுடன் ஒப்பிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

இவர் கூறுவது போலவே கிரிக்கெட்டின் தொடக்க காலத்தில் மட்டுமே இருக்கும் சூர்யகுமார் யாதவை டிவில்லியர்ஸ் உடன் ஒப்பிட்டு பேசுவது சரியாக இருக்காது என்றாலும் கூட இதுவே ஒரு பாகிஸ்தான் வீரரை ஏபிடி வில்லியர்ஸ் உடன் ரிக்கி பாண்டிங் ஒப்பீடு செய்து பேசியிருந்தார் என்றால் சல்மான் பட் போன்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களும் அதை கொண்டாடி தான் இருப்பார்கள் என்பது இந்திய ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது..

டி20 பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு அடுத்தபடியாக  சூர்யகுமார் யாதவ் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |