விபத்தில் வாலிபர் உயிரிழந்ததை பார்த்து சக நண்பர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் கோவையை சுற்றிப்பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இவர்கள் கோவையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு ஊருக்குப் புறப்பட்டபோது எட்டிமடை அருகே எதிர்பாராதவிதமாக விக்னேஷின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதி விட்டது.
இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் விக்னேஷ் பலியானதை அறிந்த நண்பர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனை அறிந்த கே.கே சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நண்பர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.