வாக்குப்பதிவு மையத்திற்குள் கொரோனா தொற்று நோயாளிகளை அனுமதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்திற்கு மனு மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்கும் நேரமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையருக்கு, திருப்பூரை சேர்ந்தவர் கல்வியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, வாக்குப்பதிவு மையங்களில் கொரோனா தொற்று நோயாளிகள் நேரடியாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கடைசி ஒரு மணி நேரம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையர் குறிப்பிட்டிருந்தார். அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குபதிவு மையத்திற்குள் கொரோனா தொற்று நோயாளிகளை அனுமதிப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதே சமயத்தில் வாக்களிக்கும் உரிமையும் அவர்களுக்கு பறிபோகக்கூடாது. தபால் ஓட்டுகள் மூலம் வாக்களிக்க கொரோனா தொற்று நோயாளிகளுக்கு அனுமதி வழங்கி, உரிய வழிவகை செய்திட வேண்டும். கொரோனா தொற்று உள்ளவர்களை வாக்குப்பதிவு மையத்திற்குள் அனுமதிப்பது கொரோனா இல்லாதவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். தேர்தல் அலுவலர்களுக்கும், மற்ற வாக்காளர்களுக்கும் இந்த கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கொரோனா தொற்று நோயாளிகளை வாக்குப்பதிவு மையங்களில் அனுமதிக்கும் முடிவை உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.