இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம் என்று தெரிவித்துள்ளார்..
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 6 முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட 7 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று சில்கெட்டில் நடந்த முதல் லீக்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 137 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிடா தார் 37 பந்துகளில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மேலும் பிஸ்மா மரூஃப் 32 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அனுபவ வீராங்கனை ஸ்மிருதி மந்தானா 17 மற்றும் சப்பினேனி மேகனா 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து ஜெமிமா 2, ஹேமலதா 20, கேப்டன் ஹர்மன் பிரீத் 12 , பூஜா 5 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அதனைத் தொடர்ந்து வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 13 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார்.. மற்றபடி யாரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரியதாக ரன்கள் சேர்க்கவில்லை.. இதனால் இந்திய அணி 19.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இதனால் பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 7ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கியதும் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. வழக்கமாக 5ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கும் கவுர் நேற்று இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிப்பதற்காக அந்த முடிவை எடுத்ததாக கூறினார்.. ஆனால் அதுவே சறுக்கலாக மாறிவிட்டது.. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக நஸ்ரா சந்து 3 விக்கெட்டுகளும், நிடா தார் மற்றும் சாடியா இக்பால் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்தியா டி20 போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது இது 3ஆவது முறையாகும். மேலும், பெண்கள் ஆசியக் கோப்பை வரலாற்றில் தங்கள் பரம எதிரியான பாகிஸ்தானிடம் முதல் தோல்வியையும் இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போட்டிமுடிந்த பின் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் கூறியதாவது, “போட்டியின் போது நடுவில், நாங்கள் மற்ற பேட்டர்களுக்கு வாய்ப்பளிக்க முயற்சித்தோம், இது இன்று எங்களை பாதித்து விட்டது. இது துரத்தக்கூடிய இலக்காக இருந்தது. மிடில் ஓவர்களில், நாங்கள் சிங்கிள்ஸ் எடுக்கவும், ரொட்டேட் ஸ்ட்ரைக் செய்யவும் முடியவில்லை, நாங்கள் அதிக டாட் பால்களை விளையாடினோம். என்னைப் பொறுத்தவரை, யார் அணியில் புதிதாக இருந்தாலும், அவர்கள் உலகக் கோப்பைக்கு முன்னதாக நல்ல எண்ணிக்கையிலான ஆட்டங்களில் விளையாட வேண்டும் என்பது முக்கியம், ஏனென்றால் நீங்கள் எப்போது இடத்தை மாற்றினாலும் வரும் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். இந்த போட்டி மற்றவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது, என்று கூறினார்.
மேலும் அவர், “நாங்கள் அதைப் பற்றி அறிந்திருக்கிறோம், எந்த அணியையும் ஒருபோதும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். இது விளையாட்டின் ஒரு பகுதி. நேற்று, தாய்லாந்து நன்றாக விளையாடியது. இன்று, அவர்கள் (பாகிஸ்தான்) நல்ல கிரிக்கெட்டை விளையாடினர், மேலும் அவர்கள் வெற்றி பெறத் தகுதியானவர்கள் என்று தெரிவித்தார்..