பாரிசில் ஒரு மாணவியை சக மாணவன் மற்றும் அவரின் காதலி சேர்ந்து கொடூரமாக தாக்கி ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரிசிற்கு வெளியில் இருக்கும் Argenteuil என்ற பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய மாணவி அலிஷா. இந்த மாணவி உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து அலிஷாவிற்கும் உடன் பயிலும் சக மாணவன் மற்றும் அவரின் காதலிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அதாவது அவர்கள் இருவரும் இணையதளம் மூலமாக அலிஷாவுடன் சண்டையிட்டு வந்துள்ளனர். இதனால் வருத்தமடைந்த அலிஷா தன் தாயிடம் இது பற்றி கூறியதோடு, “என்னை அவர்கள் இருவரும் ஒருநாள் கொன்று விடுவார்கள், பாருங்கள்” என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் அந்த காதலர்கள் இருவரும் கடந்த திங்கள்கிழமை அன்று அலிஷாவிற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி சந்திக்க அழைத்துள்ளனர்.
இதனால் அலிஷாவும் அவர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அந்த மாணவன் அலிஷாவை கீழே தள்ளி குத்தி, அடித்து, தலைமுடியை பிடித்து இழுத்து கொடூரமாக தாக்கியதோடு இருவரும் சேர்ந்து ஆற்றில் தூக்கி வீசி உள்ளனர். மேலும் அந்த மாணவன் கைரேகை படாமல் இருப்பதற்காக கையுறை ஒன்றையும் அணிந்துள்ளார்.
🗨 "Ma fille m'avait dit qu'elle était menacée de mort par ce garçon et cette fille"
La mère de l'adolescente noyée à Argenteuil témoigne pic.twitter.com/RgbtFTQbc8
— BFMTV (@BFMTV) March 9, 2021
அதன்பின்பு அந்த மாணவன் வீடு திரும்பிய போது அவரின் சட்டையில் ரத்தக்கறை இருந்துள்ளது. மேலும் அந்த மாணவன் தன் தாயிடம் அலிஷாவை அடித்து ஆற்றில் தூக்கி போட்டதாக கூறியிருக்கிறார். இதனால் பதறிப்போன மாணவனின் தாய் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்பு அவர் வீட்டிற்கு சென்று பார்க்கையில் மாணவர் மற்றும் அவரின் காதலி தப்பிச்சென்றுள்ளனர்.
இதனிடையே அலிசாவின் தாய், தன் மகள் மாயமானதாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் மாணவனின் தாய் கொடுத்த தகவலின் படி காவல்துறையினர் ஆற்றில் சென்று பார்த்தபோது அலிசாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாணவன் மற்றும் அவரின் காதலி இருவரும் நண்பர் ஒருவரின் வீட்டில் மறைந்து இருப்பதை அறிந்த காவல்துறையினர் உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அரசு செய்தி தொடர்பாளர் Gabriel Attal கூறியுள்ளதாவது, இந்த மாணவிக்கு நேர்ந்தது மிகவும் கொடுமையானது, சகித்துக்கொள்ள முடியாதது என்றார். மேலும் இக்கொடூரத்தை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும் வழக்கமாக மாணவர்கள் வகுப்பறையில் சண்டையிடுவது உண்டு. ஆனால் சமீப காலமாக பள்ளி முடிந்து இணையம் வழியாகவும் சண்டையிட்டு வருவது தொடர்ந்து வருகிறது என்று கூறியுள்ளார்.