கருக்கலைப்பு செய்த இளம்பெண் உயிரிழந்த வழக்கில் மருந்தாக உரிமையாளர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்தது தெரியவந்தது .
கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமான அமுதா அசகளத்தூரில் இருக்கும் மருந்தகத்திற்கு சென்று கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை பரிசோதனை செய்துள்ளார். அங்கிருந்து மருந்தாக உரிமையாளர் வடிவேல் என்பவர் அமுதாவை பாண்டியாங்குப்பம் கிராமத்திற்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்து பார்த்து கருவில் இருப்பது பெண் குழந்தை என கூறியுள்ளார்.
இதனையடுத்து 3-வதாக பெண் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாத அமுதா கருவை கலைக்க முடிவு செய்தார். கடந்த 17-ஆம் தேதி வடிவேல் அமுதாவுக்கு கரு கலைப்பு மாத்திரைகளை கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டுவிட்டு நேற்று முன்தினம் நிராமணியில் இருக்கும் பெற்றோர் வீட்டிற்கு சென்ற அமுதாவுக்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வடிவேலை கைது செய்து விசாரணை நடத்திய போது மருத்துவம் படிக்காமல் அவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.