Categories
மாநில செய்திகள்

“இல்லம் தேடி கல்வி” வளர்ந்து வரும் நாடுகளுக்கு சிறந்த முன்மாதிரி திட்டம்…. கலிபோர்னியா பல்கலைக்கழகம் பாராட்டு….!!!!

அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் கார்த்திக் முரளிதரன், அபிஜித் சிங், மாரிசியோ ரோமரா ஆகியோர் கொரோனா பெருந்தொற்றின் போது மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் குறைபாடுகள் மற்றும் அதனை சீர் செய்த வழி முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பேராசிரியர் கார்த்திக் முரளிதரன் கூறியதாவது, கொரோனா பெருந்தொற்றின் போது மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளிகள் மற்றும் அதனை சீர் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வுகள் தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் இருக்கும் 220 கிராமங்களில் மேற்கொள்ளப் பட்டது. அப்போது 19,000 மாணவர்களின் கற்றல் அடைவு திறன் குறித்து ஆய்வு செய்தோம். அதன் பிறகு கடந்த 2019-ஆம் ஆண்டு அனைத்து கிராமங்களிலும் உள்ள தொடக்கக் கல்வி மாணவர்களின் நிலை குறித்த தகவல்களை திரட்டினோம். அதாவது கொரோனாவுக்கு முன்பு சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஊரடங்கு வந்த பிறகு மாணவர்களின் கற்றல் திறனை குறித்து ஆய்வு செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த ஆய்வின் முடிவில் பிற மாநிலங்களில் மாணவர்களின் கற்றல் இடைவெளிகள் 30 முதல் 50% வரை சரி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் 65 சதவீதத்திற்கும் மேல் கற்றல் இடைவெளிகள் சரி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் இல்லம் தேடி கல்வி திட்டம் ஆகும். இதன் காரணமாக இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடர்ந்து நடத்த அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார். மேலும் இல்லம் தேடி கல்வி அமைப்பின் சிறப்பு அதிகாரி இளம் பகவத், தமிழ் மற்றும் கணக்குப் பாடங்களில் இல்லம் தேடி கல்வி அமைப்பின் மூலம் மாணவர்கள் இடையே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு இல்லம் தேடி கல்வித் திட்டத்தை 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இதேபோன்று எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு உறுதி செய்யப்படும் என்றார்.

Categories

Tech |