குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000 உதவித்தொகை வழக்கும் திட்டத்தினை காலம் தாழ்த்தாமல் தமிழ்நாடு அரசானது உடனடியாக நிறைவேற்றவேண்டும் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் இருப்பதாவது “6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வரும் என உயர்கல்வித்துறை அறிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏழை மாணவிகள் பயனடையும் விதமாக ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரம் தேர்தல் நேரத்தில் திமுக அளித்த மிகமுக்கியமான வழக்குறுதிகளில் ஒன்றான குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இதுவரை செயல்படுத்தவில்லை.
இத்திட்டம் கடந்த பொங்கலுக்கும், உள்ளாட்சித்தேர்தல் முடிந்த பின்பும் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்படாததால் தமிழ்நாடு அரசு மீது பெண்கள் மிகப்பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர். ஆகவே இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்றவேண்டும் என தே.மு.தி.க சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.