இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக மக்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தொடக்கத்தில் மூன்று மாதங்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம் மக்களின் தேவையை கருதி தொடர்ந்து நீட்டிக்கப்பட்டே வருகின்றது.
அதன்படி கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்த திட்டம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தின் கீழ் தற்போது வரை 80 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த திட்டம் முடிவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் மீண்டும் இந்த திட்டத்தை அரசு நீடிக்குமா என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளதால் இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இலவச உணவு தானியங்கள் பெற்று வந்த ரேஷன் அட்டைதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.