உத்திரப்பிரதேசத்தில் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
உத்திர பிரதேச மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் உத்தரப்பிரதேச மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் குறித்த பிரச்சாரங்களை செய்து வருகிறார்.
அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் தேர்தலின்போது 40 சதவிகித இடம் பெண்களுக்கு வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ள தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு ஸ்மார்ட் போனும் பட்டதாரி பெண் களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். மேலும் உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் உறுதிமொழி அளித்துள்ளார். ஆனால் உத்திரப்பிரதேச மாநில பாஜக துணைத் தலைவர் விஜய் பகத் கூறுகையில் பிரியங்கா காந்தி 2022ஆம் ஆண்டு சட்ட தேர்தலை கருத்தில் கொண்டே இப்படிப்பட்ட பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருவதாக கூறினார். மேலும் மத்திய பிரதேசத்தில் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனக்கூறிவிட்டு வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றியதை மறந்துவிடாதீர்கள் மக்களே என அவர் கூறியுள்ளார்.