இந்தியாவின் கடன் உதவி வாயிலாக வழங்கப்படும் கடைசிகட்ட எரிப்பொருள் இம்மாதத்தில் இலங்கை சென்றடையும். இதையடுத்து இலங்கையானது மேலும் எரிப்பொருள் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் உணவு, மருந்து, சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் எரிபொருள் என்று அனைத்து அத்தியாவசிப் பொருட்கள் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் அரசுக்கு எதிராக பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சமையல் எரிவாயு மற்றும் எரிப்பொருள் வாங்குவதற்காக மக்கள் பலமணி நேரங்கள் காத்திருக்கும் அவலநிலை நீடித்து வருகிறது. ஏப்ரல் முதல் சுமார் 10 மணிநேரம் மின்தடையை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இச்சிக்கலில் இந்தியா மட்டுமே இலங்கைக்கு கைகொடுத்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை நாட்டின் எரிப்பொருள் தேவைக்காக இந்தியா ரூபாய் 3,908 கோடிக்கு கடன் உதவி அளித்துள்ளது. இந்தியாவை தவிர்த்து வேறுஎந்த நாடும் இலங்கைக்கு எரிப்பொருள் வாங்குவதற்கு கடன் உதவி அளிக்கவில்லை.
இந்நிலையில் இலங்கை எரிசக்திதுறை அமைச்சர் காஞ்சன விஜேசேகரா கூறியதாவது “இந்தியாவின் கடன் உதவி வாயிலாக அனுப்பப்படும் டீசல் 16 ஆம் தேதியும், பெட்ரோல் வரும் 22ஆம் தேதியும் இலங்கை வந்தடையும். சென்ற வாரம் முன்னுரிமையின் படி 2800 – 3000 மெட்ரிக்டன் மட்டுமே வழங்கினோம். வாரத்துக்கு தேவையான முழுடீசலும் தற்போது வழங்கப்படுகிறது. நாட்டின் தினசரி பெட்ரோல் தேவையானது 3500 டன் ஆகும்.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று முதல் தினமும் 3000 முதல் 3200 மெட்ரிக்டன் பெட்ரோல் வழங்கப்படுகிறது” என்று கூறினார். இந்தியாவின் கடன் உதவியின் கீழ் அனுப்பிவைக்கப்படும் கடைசி கட்ட எரிப்பொருள்தான் வருகிற 16, 22 ஆம் தேதிகளில் வருகிறது. அதன்பின் அடுத்தமாதம் முதல் ஏற்படக்கூடிய எரிப்பொருள் தேவையினை இலங்கையானது எவ்வாறு சமாளிக்கும் என்று தெரியவில்லை. இதனால் இந்நாட்டில் வாகனங்கள் ஓடுவது சந்தேகம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.