இலங்கை நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு பின் அந்த நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருவதால் பிரதமர்மகிந்தா ராஜபக்சே, அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக அந்நாட்டில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையில் போராட்டங்கள் வலுத்து வரும் சூழலில், மந்திரி சபை கலைக்கப்பட்டு புதிய மந்திரிகள் பொறுப் பேற்றனர். புதிதாக பொறுப்பு ஏற்ற மந்திரிகளுடன் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது.
இந்த நிலையில் நாடாளுமன்றம் கூடியபோது பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கிக்கொண்டது. எனினும் 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை ஆகும். இதற்கிடையில் ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 145 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. இருந்தாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை சுதந்திர கட்சி ஆகிய கட்சிகள் அரசுக்கான ஆதரவை திரும்பபெற்றது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 43க்கும் மேற்பட்ட எம்பிக்கள் ஆளுங்கட்சிக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக் கொண்டனர்.
ஆளும் எஸ்எல்பிபி கட்சிக்கு வழங்கிய ஆதரவை கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக திரும்ப பெறுகின்றன. இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசின் பலம் 102 உறுப்பினர்களாக குறைத்து உள்ளது. இதன் வாயிலாக மகிந்தா ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. அதேநேரம் அரசு பெரும்பான்மையை இழந்தபோதிலும் அதிபர் கோத்தபயா ராஜபக்சேவுக்கே அதிகமான அதிகாரம் இருப்பதால் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மேலும் சில தினங்கள் ஆகலாம். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அப்போது நடைபெறும் வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்படும் பட்சத்திலேயே மகிந்தா ராஜபக்சே அரசு கவிழும்.